தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...
1. ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர். பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!
2. பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!
3. தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!
4. தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!
5. வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!
6. பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!
7. தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!
8. வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!
9. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!
10. இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!
11. உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!
12. தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!
13. இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!
14. இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால்,பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!
15. தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!
16. தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!
17. முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!
18. உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!
19. 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!
20. அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!
21. 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!
22. புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!
23. பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!
24. நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!
25. 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
நன்றி - விகடன்
Tuesday, June 29, 2010
Tuesday, June 15, 2010
சமஸ்கிருதம் தேவையா? - பெரியார்

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் - நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன ‘மேலோர்’ மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.
முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் ‘புரோஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.
காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்ஸி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு.குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கின சம்பளம் சுமார் ரூ. 300க்கு மேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு.பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, ‘நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்’ என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்றபோதிலும் கூட அந்தமாதிரி அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்.
பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937-ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப்படையாகவே பல கூட்டங்களில் பல சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.
இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் - தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.
ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கிய காவியங்களையும்’, ‘தெய்வீகத் தன்மையும்’ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதனாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்.
உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.
1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.
இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக - ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘இல்லை’ என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, ‘பேச்சு வழக்கு இல்லாத’ ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், ‘தாய்பாஷை’? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?
இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? - பெரியார்...

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.
இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.
இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.
தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?
சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?
தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.
Subscribe to:
Comments (Atom)