
மலச்சிக்கலும் வயிற்றுப் போக்கும்
ஒரு நாள் தந்தை பெரியார் அவர்கள் எதுவோ எழுதுவதற்காகத் தம் பேனாவைத் தேடியபோது அதில் இங்க் (மை) இல்லை. உடனே தன் அணுக்கச் செயலாளராக இருந்த ராசாராமிடம் பேனா கேட்டார். அவர் தம் சட்டைப் பையில் வைத்திருந்த பேனாவைக் கொடுத்தார். அய்யா எழுதத் தொடங்கினார். இரண்டு சொற்கள் கூட எழுதியிருக்க மாட்டார். பேனாவில் இங்க் வரவில்லை. பேனாவை உதறினார். பிறகு எழுதினார். ஒரு வரி எழுதி முடிவதற்குள் மீண்டும் பேனா மக்கர் செய்தது. மீண்டும் உதறி... மீண்டும் எழுதி... மீண்டும் உதறி... தந்தை பெரியாருக்குக் கோபம் வந்துவிட்டது.
பக்கத்தில் இருந்த ராசாராமியின் நண்பர் சம்பந்ததிடம், உன் பேனாவைக் கொடு என்று கேட்டார். சம்பந்தம் கொடுத்-தார். அய்யா அதை வாங்கி எழுதினார். ஒரு வரி எழுதி முடிப்பதற்குள் இங்க் பேனா முள் வழியாகக் கொட்டி எழுதியவை கூட அழிந்து போகக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது. அய்யாவின் விரல்களிலும் மைப்பூச்சு.
இப்போது அய்யாவுக்குக் கோபம், எரிச்சல் எல்லாமே! ஆனாலும் அவற்றை வெளிப்-படுத்தாமல் கூறினார் - என்னப்பா பேனா வச்சிக்கிட்டிருக்கீங்க... ஒன்றுக்கு மலச்சிக்கல். மற்றொன்றுக்கு வயிற்றுப் போக்கு என்று இங்க் வராத பேனாவையும் இங்க் ஒழுகுகிற பேனாவையும் உதாரணத்தாலேயே விளக்-கினார். சுற்றியிருந்த எல்லாரும் சிரித்தார்கள். ராசாராமும், சம்பந்தமும் சேர்ந்து சிரித்தார்கள்.
எளிய நகைச்சுவை உணர்வுமிக்கவர் தந்தை பெரியார் அவர்கள்!